முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்லூரி விடுதிகள், பயிற்சி மையங்கள் நேற்று முதல் மூடப்பட்டன, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்லூரி விடுதிகள், பயிற்சி மையங்கள் நேற்று முதல் மூடப்பட்டன. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா 2-வது அலையை கடந்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருந்த மக்களை மீண்டும் 3-வது அலை நிலைகுலைய வைத்துக் கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது.
அதன்படி நேற்று பூங்காக்கள், கடற்கரைகளில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பொழுது போக்குக்காக செல்பவர்களை அனுமதிக்கவில்லை. பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளர்கள் நெருக்கடி இல்லாத வகையில் கடை உரிமையாளர்கள் கண்காணித்தனர்.
கல்லூரி விடுதிகள் மூடல்
கல்லூரிகளுக்கு வருகிற 20-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று கல்லூரி விடுதிகளையும் மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுதிகளும் மூடப்பட்டதால் அனைத்து மாணவ-மாணவிகளும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். அதேபோன்று போட்டித்தேர்வுக்கு மாணவ-மாணவிகள் தனியார் பயிற்சி மையங்களில் படித்து வருகின்றனர். அந்த மையங்களும் மூடப்பட்டன.
அதே நேரத்தில் பொது போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் அமல்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது. பெரும்பாலான பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் செல்லாததாகி விட்டன.
அபராதம்
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெளியில் செல்லும் மக்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் இரவு 10 மணிக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதற்கு முன்பே போலீசார் ரோந்து சென்று 10 மணிக்குள் கடைகளை அடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.