திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் 3 நாட்களுக்கு தடை இருப்பதால் வியாழக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருச்செந்தூர்:
இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை எதிரொலியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
இந்த மார்கழி மாதத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் வருவார்கள். அதேபோல் பாத யாத்திரையாகவும் தினமும் திரளான பக்தர்கள் வருகிறார்கள்.
பக்தர்கள் குவிந்தனர்
இந்த நிலையில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இதன் எதிரொலியாக நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்து கொண்டு இருந்ததால், கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது.
கடலில் புனித நீராடினர்
மேலும் ரூ.250, ரூ.100, ரூ.20 போன்ற கட்டண தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.