கொரோனா அதிகரிப்பு - புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-01-06 11:26 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த மே, ஜூன் மாதங்களில் உச்சம் தொட்ட கொரோனா தொற்று அதன்பிறகு வெகுவாக குறைந்தது. கடந்த சில மாதங்களாக 50-க்கு கீழே பாதிப்பு குறைந்து இருந்து வந்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை கொண்டாடிச் சென்றனர். 

அதே சமயம் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்காணிப்பதற்காக புதுச்சேரி எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் புதுச்சேரியில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒற்றை இலக்க எண்களில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் புதுச்சேரியில் புதிதாக 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனிடையே நேற்று முன் தினம் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று புதுச்சேரி அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 

அதன்படி இன்று முதல் புதுச்சேரியில் உள்ள மால்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பார்கள், கலையரங்கம் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

கோவில்களில் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி வழக்கம் போல் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்