கம்பத்தில் ரூ.60 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் 2 பேர் கைது
கம்பத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.60 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பம்:
கம்பத்தில் கூடலூர் சாலையில் ஒரு புளியந்தோப்பில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் சந்தேகப்படும் வகையில் சாக்கு மூட்டைகளுடன் நின்று கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து, சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கம்பம் முகைதீன் ஆண்டவர் பள்ளி தெருவை சேர்ந்த முகமது ஆசிக் (வயது 39), விவேகானந்தர் தெருவை சேர்ந்த அப்துல் காதர் (36) என்பதும் விற்பனைக்காக 7 மூட்டைகளில் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த புகையிலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.