சிக்பள்ளாப்பூரில் மீண்டும் நிலநடுக்கம்
சிக்பள்ளாப்பூரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
சிக்பள்ளாப்பூர்:
நிலநடுக்கம்
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மராட்டிய எல்லையில் உள்ள கலபுரகி, விஜயாப்புராவிலும், ஆந்திர எல்லையில் உள்ள சிக்பள்ளாப்பூரிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் உண்டானது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்டிகெரே, பந்தஹள்ளி, பில்லகுண்டனஹள்ளி ஆகிய கிராமங்களில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் தூங்கி கொண்டு இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.
2.7 ரிக்டர் அளவாக பதிவு
அப்போது சில வீடுகளில் இருந்த பாத்திரங்கள் குலுங்கி கீழே விழுந்து உருண்டோடின. ஒரு சில வீடுகளில் விரிசலும் உண்டாகி இருந்தது. இதனால் கிராம மக்கள் பீதியில் உறைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகள் 3 கிராமங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது 3 கிராமங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து கிராம மக்களுக்கு அதிகாரிகள் தைரியம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சிக்பள்ளாப்பூரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது அம்மாவட்ட மக்களை அதிர்ச்சி மற்றும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.