ஈரோடு கலெக்டர் முன்பு கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி
ஈரோடு கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற கணவன்-மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஈரோடு
ஈரோடு கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற கணவன்-மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.
தொந்தரவு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 46). இவருடைய மனைவி சசிகலா (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கட்டிட தொழிலாளியான ராமசாமி அவருடைய சகோதரர்களுடன் சேர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு தாண்டாம்பாளையத்தில் 8 சென்ட் நிலம் வாங்கி உள்ளார்.
இந்த நிலம் அருகே அதே ஊரை சேர்ந்த ஒருவருடைய நிலம் உள்ளது. இதற்கிடையில் கடந்த 2016-ம் ஆண்டு ராமசாமி தான் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட தொடங்கினார். 2017-ம் ஆண்டு வீடு கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு குடியேறினார். அப்போது பக்கத்து நிலத்தை சேர்ந்தவர், இது என்னுடைய நிலம். உடனடியாக காலி செய்யா விட்டால் வீட்டை இடித்து விடுவேன் என்று கூறி தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
தீக்குளிக்க முயற்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி, சசிகலா தம்பதியினர் இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த ராமசாமி -சசிகலா தம்பதி இதுகுறித்து கலெக்டரிடம் முறையிடுவதற்காக நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஆர்.டி.ஓ. பிரேமலதா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டு, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு இருந்த ராமசாமி, சசிகலா தம்பதியினர் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண் எண்ணையை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அலட்சியம்
இதனை சற்றும் எதிர்பார்க்காத கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்கு நின்று கொண்டு இருந்த அரசு வாகன டிரைவர்கள் தம்பதியிடம் இருந்து மண் எண்ணெய் கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர், இருவரிடமும் குறைகளை கேட்டார். பின்னர் அவர், எந்த பிரச்சினையாக இருந்தாலும் மனுவாக கொடுக்க வேண்டும். இதுபோல் தீக்குளிக்க முயற்சி செய்வது தவறாகும் என்று அறிவுரை கூறினார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்த போலீசாரை கலெக்டர் கண்டித்ததோடு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பரபரப்பு
அதைத்தொடர்ந்து போலீசார் ராமசாமி, சசிகலாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறும்போது, ‘நாங்கள் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளோம். அந்த வீட்டையும், நிலத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நாங்கள் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து தீக்குளிக்க வந்தோம் என்றனர். பின்னர் போலீசார் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.