5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும்

5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும்

Update: 2022-01-05 19:47 GMT
மேச்சேரி:-
5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.
நூற்றாண்டு விழா
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் சோரகை அர்த்தநாரி வாத்தியார். நில மீட்பு போராளி என அழைக்கப்படும் அவரின் நூற்றாண்டு விழா மணி மண்டப அடிக்கல் நாட்டு விழா மற்றும் அவரது 39 ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நங்கவள்ளி அருகே பெரிய சோரகையில் நடைபெற்றது.
விழாவிற்கு நங்கவள்ளி முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளருமான பழ. ஜீவானந்தம் தலைமை தாங்கினார். நங்கவள்ளி ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளரும், எம்.பி.யுமான சுப்பராயன், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நஞ்சப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அடிக்கல் நாட்டும் பணி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மணி மண்டப அடிக்கல் நாட்டும் பணியை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜனதா ஆட்சி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் இயங்குகின்ற ஆட்சியாக இருக்கிறது. இந்த ஆட்சி பின்பற்றுகின்ற பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் எல்லாம் மக்கள் விரோத கொள்கைகள் ஆகும். தேச விரோத கொள்கைகள் ஆக உள்ளது. 
தற்போது மத்திய அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடி கொண்டிருக்கிறார்கள். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பிப்ரவரி மாதத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. 
சேலம் உருக்காலை
சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனமாக இருக்குமோ என்ற கேள்வியும் கூட எழுகின்றன. இந்தியாவில் உள்ள தேசிய சொத்துக்களையெல்லாம் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. எனவே இந்தியா இன்றைக்கு காப்பாற்றப்பட வேண்டும். இந்திய மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். 
பிரதமர் மோடி ஆட்சியின் பிடியில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்கும், அரசியல் சட்டத்தையும், ஜனநாயகத்தை காப்பதற்கும் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 
பா.ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும்
5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி மற்றும் அதனுடன் கூட்டு சேர்ந்துள்ள கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெறக்கூடாது. மக்கள் மனநிலை பா.ஜனதா கட்சிக்கு எதிராக உள்ளது. 
உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜனதா கட்சி தோற்கிறது என்றால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தோற்கிறது, ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது என்று பொருள். 
எனவே நேர்மையான, ஜனநாயகமான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது. வருகிற 5 மாநில தேர்தல் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய தேர்தலாக உள்ளது. இந்த தேர்தல் பா.ஜனதா கட்சிக்கும், தலைமைக்கும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்