சோலார் மின்விளக்கு திருடிய வாலிபர் கைது

சோலார் மின்விளக்கு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-05 19:29 GMT
புளியங்குடி:
புளியங்குடி தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி நிர்வாகத்தால் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் புளியங்குடி சிந்தாமணி பகுதியில் ஏ.டி.எம். மற்றும் தனியார் பல்க் அருகே உள்ள மின் கம்பத்தில் சோலார் விளக்கு எரியாததால் இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். அதன் பேரில் நகராட்சி ஊழியர்கள் வந்து பார்த்தபோது அந்த மின் கம்பத்தில் உள்ள சோலார் விளக்கு காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங், புளியங்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை நேரத்தில் ஒரு டிராக்டர் ஒன்று அந்த மின்கம்பத்தில் உரசி செல்வதும், அதனால் சோலார் விளக்கு கீழே விழுந்துள்ளதும் அந்த டிராக்டர் டிரைவர் அந்த சோலார் விளக்கை எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சோலார் விளக்கை திருடிய நபர் சிந்தாமணி சான்றோர் நடுத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்த் (வயது 31) என்பதும், சோலார் விளக்குகளை தனது செங்கல் சூளைக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் தலைமையிலான போலீசார் ஆனந்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்