நெல்லை மாவட்டத்தில் 13.86 லட்சம் வாக்காளர்கள்

நெல்லையில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 13.86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

Update: 2022-01-05 19:13 GMT
நெல்லை:
நெல்லையில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 13.86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 

வாக்காளர் பட்டியல்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்று கொண்டனர்.
பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 1-1-2022 அன்று தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி வெளியிடப்பட்டது. அப்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 67 ஆயிரத்து 74 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 96 ஆயிரத்து 271 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 113 பேரும் என மொத்தம் 13 லட்சத்து 63 ஆயிரத்து 458 வாக்காளர்கள் இருந்தனர்.

தொடர்ந்து 6 முறை புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றிற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன்படி புதிதாக ஆண் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 981 பேரும், பெண் வாக்காளர்கள் 13 ஆயிரத்து 253 பேரும், இதர வாக்காளர்கள் 9 பேரும் என மொத்தம் 24 ஆயிரத்து 243 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இறந்தவர்கள் 399 பேர், இரட்டை வாக்கு பதிவுகளுக்காக 81 பேர், வாக்காளர்கள் இடம் மாறிச் சென்றவர்கள் 1081 பேர் என மொத்தம் 1,561 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 583 வாக்காளர்களின் பெயர் மற்றும் இதர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 2 ஆயிரத்து 293 வாக்காளர்களுக்கு முகவரி மாற்றம் செய்யப்பட்டது.

13.86 லட்சம் வாக்காளர்கள்

இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13 லட்சத்து 86 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6 லட்சத்து 77 ஆயிரத்து 342 பேரும், பெண்கள் 7 லட்சத்து 8 ஆயிரத்து 679 பேரும், இதர வாக்காளர்கள் 119 பேரும் உள்ளனர். நெல்லை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 806 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 270 பேரும், பெண்கள் 1 லட்சத்து 52 ஆயிரத்து 472 பேரும், இதர வாக்காளர்கள் 64 பேரும் உள்ளனர்.

பாளையங்கோட்டை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 957 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 597 பேரும், பெண்கள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 338 பேரும், இதர வாக்காளர்கள் 22 பேரும் உள்ளனர்.

அம்பை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 192 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 140 பேரும், பெண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 45 பேரும், இதர வாக்காளர்கள் 7 பேரும் உள்ளனர்.
நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 549 பேரும், பெண்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 78 பேரும், இதர வாக்காளர்கள் 11 பேரும் உள்ளனர்.
ராதாபுரம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 786 பேரும், பெண்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 746 பேரும், இதர வாக்காளர்கள் 15 பேரும் உள்ளனர்.

ஆதார் எண்ணுடன் இணைப்பு

உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதற்கான விதிமுறைகளை வெளியிடும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக அரசின் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

இறுதி வாக்காளர் பட்டியல் உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், வாக்குச்சாவடி அமைவிடங்கள், ஊராட்சி மன்றங்கள், மாநகராட்சி குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். அங்கு வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்து கேட்பு

தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், தேர்தல் பிரிவு தாசில்தார் கந்தப்பன், தாசில்தார்கள் சுப்பு, ஆவுடையப்பன், பாலசுப்பிரமணியன், வெற்றிச்செல்வி, இசக்கி பாண்டியன், செல்வகுமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்