விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

நாகர்கோவிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாய சங்கத்தினர் 69 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-05 19:10 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாய சங்கத்தினர் 69 பேரை போலீசார் கைது செய்தனர்.
காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குமரி மாவட்ட குழு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
குமரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், வேளாண் பயிர்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், முற்றிலுமாக அழிந்து போன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், திற்பரப்பு இடதுகரை மற்றும் வலதுகரை சானல்களை தூர்வாருவதோடு உடைந்துபோன மதகுகளை சரிசெய்ய வேண்டும், அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது.
69 பேர் கைது
இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, செல்வராஜ், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் முத்துராமு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அமிர்தலிங்கம், ஆறுமுகம் பிள்ளை, ராமச்சந்திரன், உஷா பாசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த காத்திருப்பு போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட மொத்தம் 69 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்