வங்கி அதிகாரி என கூறி நகை திருப்ப வரும் பெண்களிடம் பண மோசடி செய்தவர் கைது

வங்கி அதிகாரி என கூறி நகை திருப்ப வரும் பெண்களிடம் பணமோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-05 18:50 GMT
ஆர்.எஸ்.மங்கலம்
வங்கி அதிகாரி என கூறி நகை திருப்ப வரும் பெண்களிடம் பணமோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நகையை திருப்ப சென்றார்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள ஒரு வங்கியில் செட்டிய மடை கிராமத்தைச் சேர்ந்த மாணவி வசந்தி (வயது 38) என்பவர் கடந்த மாதம் 28-ந்தேதி, அடகு நகையை திருப்ப சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வசந்தியை தனியாக அழைத்து நான் வங்கியில் உதவி மேலாளர், என் பெயர் குமார் என்று அறிமுகம் ஆனார். வட்டியை குறைப்பதாக கூறி நகை ரசீது, ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பெற்று கொண்டார். பின்னர் அவர் வசந்தியிடம் தபால் அலுவலகத்தில் வட்டி தள்ளுபடி விண்ணப்பம் வாங்கி வருமாறு கூறியுள்ளார். 
இதையடுத்து வசந்தி சென்றவுடன் மர்ம நபர் மாயமாகி விட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மேலும் திருவாடனை துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னகண்ணு ஆலோசனையின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபரை தேடி வந்தனர்.
சுற்றிவளைப்பு
இந்தநிலையில் அந்த நபர், ஏர்வாடி பகுதியில் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் சிவகங்கை நேரு நகரைச் சேர்ந்த மீரான் மைதீன் வயது (63) என்பதும், வசந்தியை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்ததும் தெரியவந்தது. அந்த பணத்தில் வீட்டுக்கு ஆடம்பர பொருட்களை வாங்கியதும் தெரிந்தது.
மேலும் விசாரணையில் இவர், பரமக்குடி கீழபள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாண்டியம்மாள்(50) என்பரிடம் இதுபோல் ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மோசடி செய்ததாக பரமக்குடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
உல்லாச வாழ்க்கை
இதுகுறித்து போலீசார் கூறும்போது, மீராமைதீனுக்கு குடும்பம் எதுவும் இல்லை.  வங்கிக்கு சென்று நகை திருப்ப வரும் பெண்களை நோட்டமிட்டு அவர்களிடம் நைசாக பேசி பணத்தை வாங்கிக்கொண்டு நழுவி விடுவான். 
இந்த பணத்தை வைத்து உல்லாசமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளேன். திருட்டு சம்பவத்தில் ஈடுபடும்போது தான் வங்கி அதிகாரி கூறியுள்ளார். இவன் திண்டுக்கல், திருப்பூர் போன்ற இடங்களில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார் என்றனர்.

மேலும் செய்திகள்