வேலூர் மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த அனுமதி இல்லை

வேலூர் மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த அனுமதி இல்லை என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2022-01-05 18:35 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த அனுமதி இல்லை என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

உபகரணங்கள் வழங்கும் விழா

வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்துகொண்டு 224 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். 

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பிய நேரத்தில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. இந்தமுறை கொரோனா பரவல் வேகமாக உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி காளை விடும் விழா நடத்த பல்வேறு கிராமங்களில் இருந்து அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை அரசின் அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அனுமதி இல்லை

இந்தாண்டு விழா நடத்துவதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகமாக இருப்பதால் காளைவிடும் விழா நடத்த அனுமதி இல்லை. அரசாணை வரப்பெற்றாலும் வேலூர் மாவட்டத்தில் விழா நிறுத்தப்படும். மாவட்டத்திற்கு பக்தர்கள் பலர் வருகை தருகின்றனர். அவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய இயலாது. எனினும் அறிகுறி தென்படுவர்களுக்கு பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும்.
வெளிமாநிலத்தவர்கள் மூலம் சி.எம்.சி. ஆஸ்பத்திரி ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 தற்போது 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் 3,500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் முககவசம் அணியாமல் உள்ளதை காணமுடிகிறது. கட்டாயம் முககவசம் அணிந்தால் தான் தப்பிக்க முடியும். மாவட்ட எல்லைகளில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்