முககவசம் அணியாவிட்டால் அபராதம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை
முககவசம் அணியாவிட்டால் அபராதம்;
ராணிப்பேட்டை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம், வாலாஜா பஸ் நிலையம் மற்றும் கடைவீதிகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது முக கவசம் அணியாத பொதுமக்கள், மாணவ - மாணவிகள், வாகன ஓட்டிகளிடம் முக கவசம் வழங்கி கட்டாயமாக அணிய வேண்டும் என உத்தரவிட்டார். அவ்வாறு முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
தொடர்ந்து வாலாஜா பஸ் நிலையத்தில் நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்குவதை தொடங்கி வைத்தார். அதே போன்று ஆட்டோ டிரைவர்களிடம், முக கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும், அதிகமான ஆட்களை ஆட்டோக்களில் ஏற்றாமல் ஆட்டோக்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், நகராட்சி ஆணையாளர்கள் சகாயம், மகேஸ்வரி, தாசில்தார் ஆனந்தன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.