தற்கொலை மிரட்டல் விடுத்த வியாபாரிகள்
கன்னியாகுமரியில் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்த வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்த வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கடைகளை அகற்றும் பணி
கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவு பூங்காவை ஒட்டி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 34 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகள் தரை வாடகைக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
தற்போது இந்த கடைகளில் உரிய அனுமதியின்றி மேற்கூரை போடப்பட்டது. இதனால் அறநிலையத் துறை அதிகாரிகள் கடைகளை அகற்ற நேற்று காலை 8 மணிக்கு குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
வியாபாரிகள் தற்கொலை மிரட்டல்
மேலும் பாதுகாப்புக்காக போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வியாபாரிகள் திரண்டு வந்தனர்.
தங்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வரும் இந்த கடைகளை அகற்றக் கூடாது என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயத்தில் கடைகளை அகற்றினால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இணை ஆணையர் ஞானசேகரன், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து வியாபாரிகளை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை அகற்றும் பணி நடந்தது.