கோவில் திருவிழாவில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 7 பேர் கைது
கரூரில் கோவில் திருவிழாவில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும், வீடு, 4 வாகனங்களை சேதப்படுத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் வெங்கமேடு என்.எஸ்.கே. நகரில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அதே பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் (வயது 58), பிரபு (28) ஆகியோர் செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த நரேஷ் (45), மாதேஸ்வரன் (23), ரமேஷ் (51), பிரவீன்குமார் (24), சமுத்திர பாண்டியன் (26), வீரராக்கியத்தை சேர்ந்த தினேஷ் (30), வெங்கமேடு கலைஞர் காலனியை சேர்ந்த சரவணன் (25) ஆகியோர் நல்லாண்டவர் கோவில் அருகில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பிரபு மற்றும் செல்வரத்தினம் ஆகியோர் அங்கு சென்று அவர்களை தட்டி கேட்டு உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த 7 பேரும் பிரபு மற்றும் செல்வ ரத்தினத்தை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்டியதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 வாகனங்கள் மற்றும் குமார் என்பவருடைய வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் பிரபு கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து நரேஷ், மாதேஸ்வரன், ரமேஷ், பிரவீன்குமார், சமுத்திர பாண்டியன், தினேஷ், சரவணன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த பிரபு மற்றும் செல்வரத்தினம் ஆகியோரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவில் திருவிழாவில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.