‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-01-05 18:17 GMT
திண்டுக்கல்:

விபத்துக்கு வழிவகுக்கும் குழி
பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி சங்கனம்பட்டி பகுதியில் உள்ள சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென வட்டவடிவில் குழி ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் ஏற்பட்ட குழியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகாமுனி, சங்கனம்பட்டி.

அடிப்படை வசதி வேண்டும்
கம்பம் நகராட்சி 28-வது வார்டு பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் குளம் போல் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஈஸ்வரன், கம்பம்.

2 ஆண்டுகளாக மூடப்படாத பள்ளம்
வடமதுரையில் இருந்து தென்னம்பட்டி செல்லும் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைப்பதற்காக அப்பகுதியில் கிணறு போன்று பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுசென்றுவிட்டனர். இதனால் பள்ளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தை கவனிக்காமல் தவறி விழுந்து பலியாகும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஸ்குமார், வடமதுரை.

குப்பைகளுக்கு தீ வைப்பதால் அவதி
ஆத்தூர் தாலுகா சித்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டி வைக்கப்படுகிறது. மேலும் அந்த குப்பைகள் மீது மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன் அவற்றுக்கு தீ வைத்து எரிப்பவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மன்சூர், சித்தூர்.

மேலும் செய்திகள்