மணல் குவாரி அமைக்க கோரி தாசில்தார் அலுவலகம் முன் மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஆவுடையார்கோவில் பகுதியில் மணல் குவாரி அமைத்து தரக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-05 17:36 GMT
ஆவுடையார்கோவில்:
காத்திருப்பு போராட்டம் 
ஆவுடையார் கோவில் தாலுகா பகுதியில் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட பொதுப்பணித்துறை மற்றும் கனிமவள துறையால் மணல் குவாரி அமைக்க நில அளவை செய்த இடத்தில் மணல் குவாரி அமைத்து தரக்கோரி தாசில்தார் அலுவலகம் முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மணல் வண்டி உரிமையாளர் நலச்சங்க தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார்.  
சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர்கள் பழனிச்சாமி, இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் கோரிக்கையை விளக்கிப் பேசுகையில், ஆவுடையார்கோவில் தாலுகா பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் மாட்டுவண்டி தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். 
மணல் குவாரி அமைக்க வேண்டும் 
இவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாத நிலையில் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை அரசுதான் பாதுகாத்திட வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உடனே வெள்ளாற்று பகுதியில் ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட இடத்தில் மணல் குவாரி அமைத்து தர வேண்டும் என்று கூறினார். 
காத்திருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் நெருப்பு முருகேஷ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கலந்தர், சி.ஐ.டி.யு. பொறுப்பாளார் கூத்தபெருமாள் உள்பட மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்