கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை
கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள், அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் பழைய பஸ் நிலையம், புதுச்சேரி செல்லும் சாலை மற்றும் நகராட்சிக்குட்பட்ட முக்கிய கடைவீதிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று நேற்று காலை மாவட்ட கலெக்டர் டி.மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள், வியாபாரிகளிடம் முகக்கவசம் வழங்கி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒமைக்ரான், கொரோனா தொற்று பரவல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளையும் முகக்கவசம் அணிய ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்த வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பயணிகளை ஆட்டோவில் ஏற்றிச்செல்ல வேண்டும்.
அறிவுரை
அதுபோல் பஸ்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், பயணத்தின்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்றியே பயணம் மேற்கொள்ள வேண்டும், பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை அந்தந்த பஸ் கண்டக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய கடை வியாபாரிகள் வலியுறுத்த வேண்டும்.
கடைகள், மற்றும் வணிக நிறுவனங்களில் உடல் வெப்பநிலைமானி, கை கழுவும் திரவம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும், இனிவரும் நாட்களில் கொரோனா அதிகரிக்க கூடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாஸ், தாசில்தார் ஆனந்தகுமார், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் உடனிருந்தனர்.
கண்டமங்கலம்
அதனை தொடர்ந்து கண்டமங்கலம் ஒன்றியம் ராம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும், சிறுவந்தாட்டில் மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என்றும்,
சின்னக்குப்பத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடந்து வரும் சமுதாய பண்ணை குட்டை அமைக்கும் பணியையும் கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.