சோழவந்தான்,
சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் பாண்டி (வயது71). இவர் நேற்று முன்தினம் இங்கு உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். குளிக்கச் சென்ற அவரை காணவில்லை என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தேடியுள்ளனர். அப்போது கிணற்றின் கரையில் அவர் அணிந்திருந்த ஆடை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் 65 அடி தண்ணீர் நிறைந்து இருந்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் பாண்டுரங்கன், கிராம நிர்வாக அலுவலர் பொன்பாண்டி ஆகியோர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சதக்கத்துல்லா மற்றும் தீயணைப்பு படை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் தவறி விழுந்த பாண்டியை பிணமாக மீட்டனர். சோழவந்தான் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.