கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 16¼ லட்சம் வாக்காளர்கள்-இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 16 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான இறுதி பட்டியலை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி:
இறுதி வாக்காளர் பட்டியல்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 3 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 12ஆயிரத்து 345 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 291 பேரும் என மொத்தம் 16 லட்சத்து 32 ஆயிரத்து 639 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், 29 ஆயிரத்து 74 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 3 ஆயிரத்து 716 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சரி பார்க்கலாம்
இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் விவரங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் சரி பார்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, அரசியல் கட்சி பிரதிநிதிகள் விஜயராஜசேகர்(தி.மு.க.), கேசவன் (அ.தி.மு.க.), பாபு, லாரன்ஸ் (பா.ஜனதா), ஆண்டனி ( காங்கிரஸ்), சந்திரமோகன் (தேசியவாத காங்கிரஸ்), முருகேசன் (தே.மு.தி.க.), முனியன் (இந்திய கம்யூனிஸ்டு) மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.