பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட முயன்ற மின்வாரிய என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது-ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள்
ஊத்தங்கரையில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட முயன்ற ராணிப்பேட்டையை சேர்ந்த மின்வாரிய என்ஜினீயர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:
பணம் இரட்டிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 24). விவசாயி. இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த 2-ந் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் 30 நாட்களில் இரட்டிப்பு செய்து ரூ.20 ஆயிரமாக தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதனைப்பார்த்த அருள், குறுஞ்செய்தி வந்த எண்ணுக்கு போன் செய்து, ரூ.10 ஆயிரம் தருவதாக கூறினார். எதிர்முனையில் பேசிய நபரும் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் பணத்தை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதனிடையே பணம் இரட்டிப்பு குறித்து சந்தேகம் அடைந்த அருள், ஊத்தங்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
மின்வாரிய என்ஜினீயர்
இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் மறைந்திருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் அருளிடம், பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.10 ஆயிரம் பெற்றனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்தனர். பின்னர் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த யோகநாத் (53) என்பதும், இவர் ஒழுகூர் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை என்ஜினீயராக வேலை பார்ப்பதும், மற்ற 2 பேர் வாலாஜாபேட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்வகுமார் (41) மற்றும் பழனி (51) என தெரியவந்தது. மேலும் அவர்கள் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதையடுத்து அவர்கள் 3 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தார். ஊத்தங்கரையில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட முயன்றதாக மின்வாரிய என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.