ஏழைகளின் இடிந்த வீடுகளை கட்டித்தர இயலுமா?
ஏழைகளின் இடிந்த வீடுகளை கட்டித்தர இயலுமா? என்று அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.;
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கண்மாய் பட்டியைச் சேர்ந்த அழகு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தாட்கோ மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. சுமார் 25 குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறோம். தற்போது இந்த வீடுகள் இடிந்து மோசமான நிலையில் உள்ளன. எனவே இந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித் தருமாறு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, புதிய வீடுகள் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் தொடங்கப்பட்டு, 6 மாதத்தில் வீடுகள் கட்டி முடிக்கப்படும். அதுவரை வீட்டில் வசித்தவர்கள், சமுதாயக்கூடத்தில் தங்கியிருக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 1988-ல் வீடுகள் கட்டப்பட்டன. பணிகள் முடிந்ததும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதன்பிறகு அவர்கள் தான் வீட்டுக்கான பராமரிப்பையோ, புனரமைப்பையோ மேற்கொள்ள வேண்டும். மீண்டும் வீடு கட்டித்தர நிதி எதுவும் இல்லை என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே அரசு அதிகாரிகளின் பதில் மனு மற்றும் தகவல்களின் அடிப்படையில் தான் இந்த கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தற்போது இந்த வீடுகள் கட்ட நிதி அளிக்கும் திட்டம் இல்லை என்றால் எப்படி? என கேள்வி எழுப்பினர்.
பின்னர், இவர்களுக்கு வேறு திட்டத்தில் வீடு கட்டித் தரமுடியுமா? என்பதை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கலெக்டர் ஆஜராக உத்தரவிடப்படும் எனக் கூறி, இந்த வழக்கு 7-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.