ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகை நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
நெல்லிக்குப்பம் ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
ஆதார் சேவை மையம்
நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து ஆதார் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், தொலைபேசி எண் சேர்த்தல், நீக்கல் போன்ற திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது மத்திய அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் 18 வயது முதல் 59 வயது வரை பதிவு செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லிக்குப்பம் ஆதார் சேவை மையத்தில் கடந்த சில நாட்களாக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்து வருகின்றனர்.
ஊழியரிடம் வாக்குவாதம்
நேற்று காலை ஆதார் சேவை மையத்தில் திடீர்ெரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், ஆதார் திருத்த பணிகள் தொடர்பாக அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. இதனால் அவதியடைந்த பொதுமக்கள் சேவை மைய ஊழியரிடம் கோளாறு குறித்து கேட்டபோது, அவர் சரியான முறையில் பதில் அளிக்காமலும், அலட்சியமாக பதில் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆதார் சேவை மையத்தை முற்றுகையிட்டு, ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த மற்ற ஊழியர்கள், உயர் அதிகாரிகளிடம் பேசி தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.