கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்
வேதாரண்யம் பகுதியில் கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் அடைந்து, மகசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
வேதாரண்யம்:-
வேதாரண்யம் பகுதியில் கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் அடைந்து, மகசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கனமழை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் வயலில் தண்ணீர் தேங்கி நெல்மணிகள் மூழ்கும் நிலை ஏற்பட்டது. வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம், உம்பளச்சேரி, மகாராஜபுரம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பல நாட்களாக தண்ணீரில் மூழ்கி உள்ளது.
இதனால் பயிர்கள் முளைவிட தொடங்கி விட்டதாகவும், மகசூல் இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தண்ணீரில் மூழ்கி உள்ள நெற்கதிர்களை எந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய முடியாது என்பதால் இந்த பகுதியில் ஆட்களை கொண்டு அறுவடை நடந்து வருகிறது.
இழப்பீடு வழங்க வேண்டும்
அறுவடையான பயிர்களை காய வைக்க வேண்டி இருப்பதால், கூடுதலாக செலவு ஏற்படுகிறது என்பதும் விவசாயிகளின் வேதனையாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விளைந்த பயிர்களை முழுமையாக அறுவடை செய்து மகசூலை பார்க்க முடியவில்லை. திடீரென பெய்த கனமழை பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.