கடலில் எண்ணெய் கலந்து மாசு ஏற்படுவதை தடுக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதா

கடலில் எண்ணெய் கலந்து மாசு ஏற்படுவதை தடுக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதா என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2022-01-05 16:21 GMT
மதுரை, 
ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழர் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக உள்ளேன். எங்கள் ஊர் மோர்ப்பண்ணை, கடலோர மீனவ கிராமம். ஆசிய-பசிபிக் மண்டலத்தில் எண்ணெய் வளங்களை பயன்படுத்துவதில் நம் நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது. பெரும்பாலான இந்திய துறைமுகங்கள் அதிகஅளவிலான எண்ணெய்யை ஆண்டுதோறும் கையாளுகின்றன. இதே போல தமிழக கடற்பகுதியும் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இந்தநிலையில் எண்ணெய் பொருட்களை ஏற்றி வரும் கப்பல்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால் அதில் உள்ள எண்ணெய் பொருட்கள் கடலில் கலந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 200 மில்லியன் டன்கள் அபாயகரமான பொருட்கள் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகின்றன. 
நம் நாட்டின் கடல் எல்லைப்பகுதிகளிலும் அடிக்கடி எண்ணெய் கப்பல்கள் விபத்தில் சிக்குகின்றன. இதை தடுக்க, தமிழக கடலோர பகுதிகளில் தேசிய எண்ணெய் கசிவு தடுப்புத் திட்டத்தின்கீழ் மாநில, மாவட்ட மற்றும் கடல் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் எண்ணெய் கசிவு தடுப்புக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் மாநில எண்ணெய் கசிவு தடுப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளாதா? என்பது குறித்தும், அவ்வாறு இருந்தால் அதன் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்