கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:-
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று காலை தொடங்கியது. போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் வசந்தாமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். சேதமடைந்து குடி இருக்க தகுதியற்ற வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்.
பயிர்க்காப்பீடு செய்து விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். தமிழக அரசு கோரியுள்ள நிவாரணத்தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டம் நேற்று மாலை வரை நீடித்தது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
ஏனங்குடியில் சாலை மறியல்
தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஏனங்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்ட செயலாளர் பாபுஜி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
திருமருகல் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், தலைவர் மாசிலாமணி, துணை செயலாளர் சந்திரசேகரன், துணைத்தலைவர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருக்கண்ணபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருமருகல் -நன்னிலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழ்வேளூர்
அதேபோல் கீழ்வேளூர் அருகே தேவூர் கடைத்தெருவில் விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பரமசிவம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நாகராஜன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் காசிநாதன், விவசாயிகள் சங்க ஒன்றிய துணை செயலாளர் ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 27 பேரை கீழ்வேளூர் போலீசார் கைது செய்தனர். சாலை மறியலால் கீழ்வேளூர்- கச்சனம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.