‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-01-05 16:01 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவிளக்கு எரியவில்லை
நெல்லை டவுண் கோடீஸ்வரன் நகர் 2-வது குறுக்குத் தெருவில் பல நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
க.கார்த்திகேயன், நெல்லை டவுண்.

குடிநீர் தட்டுப்பாடு
மானூர் தாலுகா பிராஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் கிராமத்தில் குடிநீர் குழாய்கள் பல ஆண்டுகளாக சேதம் அடைந்து கிடக்கிறது. மாதத்துக்கு இருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. இதனால் கிராமமக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அரிகரன், வெங்கடாசலபுரம்.

பழுதடைந்த பயணிகள் நிழற்கூடம்
திசையன்விளை தாலுகா நவ்வலடி பஞ்சாயத்து ெசம்ெபான்விளை விலக்கில் அமைந்துள்ள பயணிகள் நிழற்கூடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. அந்த கட்டிடத்தின் கீழ்புறம் சிமெண்டு பூச்சு பெயர்ந்து செங்கற்கள் உடைந்து உள்ளது. இதனால் அதில் ெபாதுமக்கள் நிற்க அச்சப்படுகின்றனர். எனவே, பயணிகள் நிழற்கூடத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குண்டும், குழியுமான சாலை
ராதாபுரம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்பு மற்றும் அதன் அருகே சிமெண்டு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
சுந்தர், ராதாபுரம்.

மின்விளக்கு ஒளிருமா?
ஏர்வாடி உப்பு வடக்கு தெருவின் மையப் பகுதியில் உள்ள மின்விளக்கு நள்ளிரவில் சரிவர எரிவதில்லை. இதனால் அந்த வழியாக இரவில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, மின்விளக்கு மீண்டும் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மீரான், ஏர்வாடி.

குடிநீர் குழாயில் உடைப்பு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி காந்திநகர் பகுதியில் மெயின் ரோடு ஓரத்தில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. ஓடை போல நீண்ட தூரத்துக்கு செல்வதால் சேறும் சகதியுமாக கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியில் சாலையோரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் எதிரில் வரும் பெரிய வாகனத்துக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கும்போது சேற்றில் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கே.திருக்குமரன், கடையம்.

சுகாதாரக்கேடு
கடையநல்லூர் தாலுகா கம்பனேரி புதுக்குடி பகுதி-1 பால அருணாசலபுரம் கிராமம் வடக்கு தெருவில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் வெளியேறுவதற்காக வாறுகால் தோண்டப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவொரு பணியும் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. இதனால் தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கி பாசிப் படர்ந்து உள்ளது. மேலும், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் குழந்தைகளும் அடிக்கடி தவறி விழுந்து விடுகின்றனர். எனவே, சுகாதாரக்கேட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுசிக் ராஜ், பால அருணாசலபுரம்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு
தென்காசி தெற்கு மாசி தெருவில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
கணேசன், தென்காசி.

நாய்கள் தொல்லை
தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் தெருக்களில் நடமாட முடியவில்லை. எனவே, நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபுபக்கர் சித்திக், பேட்மாநகரம்.

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
தூத்துக்குடியில் இருந்து மாலை 4.10 மணிக்கு ஓட்டப்பிடாரம் தாலுகா கொல்லம் பரும்பு கிராமத்துக்கு அரசு டவுண் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, அந்த பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பெ.பிச்சையா, கொல்லம் பரும்பு.

மேலும் செய்திகள்