தமிழக கவர்னர் ஆர் என் ரவி ஊட்டி வந்தார்

தமிழக கவர்னர் ஆர் என் ரவி ஊட்டி வந்தார்;

Update: 2022-01-05 15:54 GMT
ஊட்டி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு வருகை தந்தார். அவரை கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

கவர்னர் வருகை

தமிழகத்தில் நடப்பாண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தொடக்க உரையாற்றினார். இதை முடித்துக்கொண்டு கவர்னர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு மாலை 3 மணி அளவில் வந்தடைந்தார். 

அவரை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா, போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

கலெக்டர் வரவேற்றார்

பின்னர் கோவையில் இருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக ஊட்டி தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவனுக்கு மாலை 6.05 மணிக்கு வருகை தந்தார். கவர்னர் வருகையை ஒட்டி பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து வந்தன. 

ஊட்டி ராஜ்பவனுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை நீலகிரி கலெக்டர் எஸ்.பி.அம்ரித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அவர் இரவில் ராஜ்பவனில் ஓய்வெடுத்தார். 

பலத்த பாதுகாப்பு

இன்று (வியாழக்கிழமை) கவர்னர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி அறிவிக்கப் பட வில்லை. அவர் ராஜ்பவனில் ஓய்வு எடுப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.15 மணிக்கு ஊட்டி ராஜ் பவனில் இருந்து காரில் புறப்பட்டு கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி செல்கிறார். 

பின்னர் அங்கிருந்து அவர் 9.15 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு வருகிறார். தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் சர்வ தேச திருக்குறள் கருத்தரங்கில் பங்கேற்கிறார். 

நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னர் ஊட்டி வந்ததையொட்டி ராஜ்பவன், தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், கோடப்பமந்து, கோத்தகிரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்