பாதுகாப்பு பணிக்கு மதுபோதையில் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

தேனியில் நீதிபதி குடியிருப்பின் பாதுகாப்பு பணிக்கு மதுபோதையில் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-01-05 15:54 GMT
தேனி:
தேனியில் நீதிபதி குடியிருப்பின் பாதுகாப்பு பணிக்கு மதுபோதையில் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆயுதப்படை போலீஸ்காரர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் தேனி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சரவணனும், மற்றொரு போலீஸ்காரரும் லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு நீதிபதி குடியிருப்பின் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இந்த பாதுகாப்பு பணிக்காக சரவணன் மதுபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு நின்று கொண்டிருந்தபோதே அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
பணி இடைநீக்கம்
சரவணன் மதுபோதையில் பணிக்கு சென்றது குறித்து ஆயுதப்படை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இதில், போலீஸ்காரர் சரவணன் மதுபோதையில் பணிக்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் சரவணனை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்