கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட தனியார் பள்ளி

கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட தனியார் பள்ளி

Update: 2022-01-05 15:46 GMT
ஊட்டி

ஊட்டியில் தனியார் பள்ளி 150 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.

கொரோனா அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொற்று பாதிப்பால் 220 பேர் இறந்தனர். கொரோனா ஒற்றை இலக்கமாக குறைந்து வந்தது. தற்போது தினசரி பாதிப்பு அதிகரித்து இரட்டை இலக்கமாக உயர்ந்து உள்ளது. 

அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. அதன்படி நீலகிரியில் கொரோனா 2-வது அலையில் கோவிட் கேர் சென்டர்களாக இளைஞர் விடுதி, தனியார் பள்ளிகள் மாற்றப்பட்டு, அங்கு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். 

தனியார் பள்ளியில் மையம்

பின்னர் பாதிப்பு குறைந்ததால் பள்ளிகளில் படுக்கைகள் காலியானது. தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டியில் தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. 

அங்கு ஊட்டி நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள் கழிப்பிடம், படுக்கை வசதிகள் அறை, வளாகம் போன்ற இடங்களை தண்ணீர் ஊற்றி கழுவினர். கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அங்கு சுகாதார பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:- 

150 படுக்கை வசதிகள்

நீலகிரியில் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி தனியார் பள்ளி கோவிட் கேர் சென்டராக மாற்றப்பட்டு, 150 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்காக 17 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 

மருத்துவமனைகளில் 397 படுக்கை வசதிகள் தயாராக உள்ளது. கோவிட் கேர் சென்டர்களில் 1,120 படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டியை போல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 3 வட்டாரங்களில் கோவிட் கேர் சென்டர்களில் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் படுகிறது. 

நீலகிரியில் இதுவரை 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள் 11,372 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்