தேவாலாவில் பொதுமக்கள் உண்ணாவிரதம்

தேவாலாவில் பொதுமக்கள் உண்ணாவிரதம்

Update: 2022-01-05 15:43 GMT
கூடலூர்

தனியார் தார் கலவை மையம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டன. 

பொதுமக்கள் எதிர்ப்பு

கூடலூர் தாலுகா தேவாலா போகர் காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் தனியார் தார் கலவை மையமும் உள்ளது. இம் மையத்தால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் தார் கலவை மையம் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தார் கலவை மையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்று தனியார் தார் கலவை மையம் செயல்படத் தொடங்கியுள்ளதாக தகவல் பரவியது.

உண்ணாவிரதம்

இதையறிந்த ஏராளமான பொதுமக்கள் தார் கலவை மையம் முன்பு திரண்டனர். அத்துடன் அந்த தார் கலவை மையத்தை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவலறிந்த கூடலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வருவாய் துறையினர், தேவாலா போலீசார் விரைந்து வந்து போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாலையில் தார் கலவை மையம் செயல்படத் தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 

கடைகள் அடைப்பு

இதைத்தொடர்ந்து தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் தார் கலவை மையத்தில் ஆய்வு நடத்தினர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், தனியார் தார் கலவை மையத்தை திறக்கக் கூடாது என வலியுறுத்தி தேவாலா பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட தனியார் வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை

இதுகுறித்து தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, தார் கலவை மையத் தால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என அதன் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அந்த மையம் செயல்பட அனுமதி அளித்து உள்ளது. 

ஆனால் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் உரிய ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்கப்படும் என்றார். இதனிடையே கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தேவாலா போகர் காலனி மக்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்