ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்கிறது
ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்கிறது
கோவை
திருப்பூரை சேர்ந்தவர் சூர்யா (வயது35). இவர் ரவுடிபேபி சூர்யா என்ற பெயரில் டிக்டாக் செய்து பிரபலமானவர். இவருடைய நண்பர் மதுரையை சேர்ந்த சிக்கந்தர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஏராளமான டிக்டாக் வீடியோக்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர். யூடியூப் சேனலை தொடங்கியும் வீடியோக்களை வெளியிட்டனர்.
இதற்கிடையில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் யூடியூப் சேனல் நடத்தி வந்தார். அவரை ரவுடி பேபி சூர்யாவும், அவரது நண்பரும் சேர்ந்து ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் ரவுடி பேபி சூர்யா, நண்பர் சிக்கந்தர் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் பதுங்கி இருந்த 2 பேரையும் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரவுடிபேபி சூர்யா கோவை மத்திய சிறையிலும், சிக்கந்தரை பொள்ளாச்சி கிளை சிறையிலும் அடைத்தனர்.
ரவுடிபேபி சூர்யா மீது பல்வேறு மாவட்ட போலீசில் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்று ஆபாசமாக பேசி யூடியூப் சேனலில் அவர் பதிவு செய்து வருவதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? என்று மாவட்ட வாரியாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவர் மீத நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் அவரும், சிக்கந்தரும் நடத்தி வந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
---