‘லிப்ட்' கொடுப்பது போல் வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது
லிப்ட் கொடுப்பது போல் வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது;
கோவை
கோவை புரூக்பீல்டுரோடு, சிரியன் சர்ச் அருகில் ரெயில்வே தண்டவாள பகுதி உள்ளது. இங்கு ஏற்கனவே கொலை மற்றும் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றசம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்தநிலையில் ரெயில்வே தண்டவாள பகுதியில் பதுங்கி இருந்துகொண்டும், லிப்ட் கேட்பதுபோல் நடித்தும் அந்த பகுதியில் வழிப்பறி குற்றங்களில் சில ஆசாமிகள் ஈடுபட்டு வருவதாக ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு புகார்கள் வந்தன.
இந்த நிலையில் சம்பவத்தன்று, கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (44) என்பவரிடம், ஆசாமிகள் லிப்ட் கொடுப்பது போல் நடித்து கத்தி முனையில் மிரட்டி ரூ.500 மற்றும் அவரது செல்போனை பறித்துச்சென்றனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வழிப்பறி ஆசாமிகளை பிடிக்க கோவை உதவி கமிஷனர் வீரபாண்டியன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பரிமாளதேவி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் போலீசார் சுரேஷ், சாகுல்ஹமீது ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல்வேட்டை நடைபெற்றது.
இதில் விளாத்திகுளத்தை சேர்ந்த முருக மல்லுசாமி என்ற முருகன் (வயது31), உத்தமபாளையத்தை சேர்ந்த சயீத் அப்ரிடி (19), கோவை கணபதிபுதூரை சேர்ந்த திருமுருகன் (19) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரொக்கப்பணம் ரூ.4,650, 4 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.