காய்ந்த பனை ஓலைகள் விற்பனை தீவிரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடன்குடி பகுதியில் காய்ந்த பனை ஓலைகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது
உடன்குடி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்கு முன்பு அடுப்பில் பானைகளை வைத்து பொங்கல் இடுபவர்கள் பனை ஓலைகளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். பனை ஓலை வைத்து பொங்கலிட்டு பொங்கல் பொங்கிவரும் போது, பொங்கலோ பொங்கல் என்று குடும்பத்தோடு சேர்ந்து உற்சாகமாக குரல் கொடுப்பார்கள். அதனால் பொங்கல் பண்டிகையில் காய்ந்த பனை ஓலைகள் முக்கியமான பங்கு வகிக்கிறது.
இதை தொடர்ந்து உடன்குடி வட்டார, நகர பகுதிக்கு உட்பட்ட பரமன்குறிச்சி, குலசேகரபட்டினம், தண்டுபத்து, சீர்காட்சி. கொட்டங்காடு, தாண்டவன்காடு, சிறுநாடார் குடியிருப்பு உட்பட்ட 18 பஞ்சாயத்து பகுதிகளிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்ந்த பனை ஓலை விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே பல இடங்களில் பனை ஓலைகளை விற்பனைக்காக குவித்து வைத்து ஒரு ஓலை ரூ.15 வரை விற்பனை செய்கின்றனர்.