விவசாயிகள் ஆட்டுக்குட்டியுடன் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆட்டுக்குட்டியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2022-01-05 12:56 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் ஆடு வளர்ப்போர் சங்க மாவட்டத் தலைவர் கருப்பசாமி, துணைத்தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் தங்கப்பாண்டி, துணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் பெரியசாமி ஆகியோர் ஆட்டுக்குட்டியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் இசக்கிராஜை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருந்த தாவது:-
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து அதிக அளவில் பனிப் பொழிவு இருப்பதால், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு கோமாரி, அம்மை போன்ற நோய்களுடன், கானை நோயும் அதிக அளவில் பரவி வருவதால், அதிக அளவில் ஆடுகள் இறந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் அதிக அளவில் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.
இதனால் கால்நடைத் துறையினர் இறந்து போன ஆடுகள் குறித்து கிராமம் தோறும் கணக்கீடு செய்து, ஆடு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி மற்றும் இலவசமாக மருந்து வழங்கவேண்டும். இறந்து போன ஆடுகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்