தாளவாடி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
தாளவாடி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
ஈரோடு
தாளவாடி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
தாளவாடி ஊராட்சி ஒன்றியம் ஆசனூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டத்தின் கீழ் சமுதாயதொழில் திறன் பள்ளியில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அலுவலக தளவாட பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளும் பயிற்சி நடந்து வருகிறது. இதனை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் தலமலை ஊராட்சிக்கு உள்பட்ட இட்டரை மற்றும் ராமரணை பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து அப்பகுதியில் மக்காச்சோளம் மற்றும் ராகி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டு, 6 பயனாளிகளுக்கு தேன் பெட்டி, தேன் பிழிந்தெடுக்கும் உபகரணம் மற்றும் வெங்காய விதைகள் உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் ஆசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் மன்றத்தினையும், 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் இட்டரைபகுதியில் சோலார் இயந்திரம் மூலம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளும் பணியினையும், இட்டரை பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 பசுமை வீடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உழவர் சந்தை
முன்னதாக தாளவாடி பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையினையும் மற்றும் தாளவாடியில் அமையவுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான இடத்தினையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது உதவி இயக்குனர் (வேளாண்மை) மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.வி.ஆனந்த், பிரேம்குமார் உள்பட பலர் கலெக்டருடன் சென்றனர்.