மாயமான கல்லூரி மாணவியை தம்பதி கடத்தினார்களா?

சுசீந்திரத்தில் மாயமான கல்லூரி மாணவியை, அதே பகுதியில் தங்கியிருந்த இளம்தம்பதி கடத்தினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-01-04 21:18 GMT
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரத்தில் மாயமான கல்லூரி மாணவியை, அதே பகுதியில் தங்கியிருந்த இளம்தம்பதி கடத்தினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கல்லூரி மாணவி
சுசீந்திரம் பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 18 வயதுடைய மகள் தஞ்சையில் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
சம்பவத்தன்று மாணவி நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை சுசீந்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளது.
இளம்தம்பதி
இந்த மாணவிக்கு சொந்தமான ஒரு வீட்டில் மதுரையை சேர்ந்த ஒரு இளம்தம்பதி தங்கியிருந்தனர். அந்த இளம்பெண் கல்லூரி மாணவியிடம் மிகவும் நெருக்கமாக பழகினார். இருவரும் ஒன்றாக கடைகளுக்கும், கோவிலுக்கும் சென்று வந்தனர். 
சம்பவத்தன்று கல்லூரி மாணவியும், இளம்பெண்ணும் நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். அதன்பின்பு அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை.
அதேநேரத்தில் இளம்பெண்ணின் கணவரையும் காணவில்லை. இதனால், கல்லூரி மாணவியை அந்த தம்பதிதான் கடத்தி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாணவி மற்றும் தம்பதியின் செல்போன்களை தொடர்பு கொண்ட போது அவை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 
இதையடுத்து தம்பதி மற்றும் கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும், மாணவியை தம்பதி எதற்காக கடத்தினார்கள்? அவர்கள் உண்மையிலேேய கணவன்-மனைவிதானா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்