சேலத்தில் 146 பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
சேலத்தில் 146 பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
சேலம்:-
சேலத்தில் 146 பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பஸ்களில் ஆய்வு
சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று புதிய பஸ் நிலைய அருகே உள்ள ஜவகர்மில் திடலில் நடந்தது. இந்த பஸ்களை சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜராஜன் தலைமையில் வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் ரங்கன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சதாசிவம், செந்தில் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
பஸ்களில் அவசர வழி கதவு முறையாக பராமரிக்கப்படுகிறதா?, படிக்கட்டுகளின் உயரம் சரியான அளவில் உள்ளதா?, முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா? உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வை சேலம் துணை போலீஸ் கமிஷனர் மாடசாமி பார்வையிட்டு பள்ளிகளின் வாகன டிரைவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கினார்.
146 வாகனங்கள்
மேலும் சேலம் சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தன் தலைமையில் வீரர்கள் அங்கு வந்து தீயணைப்பு கருவியை பயன்படுத்தும் முறை குறித்து செயல்முறை விளக்கத்துடன் டிரைவர்களுக்கு செய்து காண்பித்தனர். நேற்று மொத்தம் 23 பள்ளிகளில் இருந்து வந்த 146 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது பஸ்களில் இருந்த சில குறைபாடுகளை விரைவில் சரிசெய்யும் படி டிரைவர்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.