5 கள்ளத்துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

சாணார்பட்டி அருகே பதுக்கி வைத்திருந்த 5 கள்ளத்துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-04 19:58 GMT
திண்டுக்கல்:

துப்பாக்கியால் சுட்டுக்கொலை
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்தவர் ராகேஷ்குமார் (வயது 26). கடந்த 2-ந்தேதி நள்ளிரவு இவர், முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தாங்களாகவே துப்பாக்கி தயாரித்து, கொலைக்கு பயன்படுத்தியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்்த சம்பவம் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

அதிரடி சோதனை
இந்தநிலையில் சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கள்ளத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை, பெரியமலையூர், சின்னமலையூர், பள்ளத்துக்காடு, வலசு, மலைப்பட்டி, கொரசின்னம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

5 துப்பாக்கிகள் பறிமுதல்
அப்போது தவசிமடையை சேர்ந்த சேவியர் (வயது 53), அமுல்ராஜ் (37), கொரசின்னம்பட்டியை சேர்ந்த மூக்கன் (80), சின்னஅழகன் (52) ஆகியோர் வீடுகளில் 5 கள்ளத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகள், கரி மருந்து, தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க தேவையான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேவியர், மூக்கன், சின்ன அழகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான அமுல்ராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சாணார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளத்துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திண்டுக்கல் தாலுகா, சிறுமலை, நத்தம், சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தால் அதனை தாமாக வந்து மலைப்பகுதியில் வீசி விடவேண்டும்.

இல்லையென்றால் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் சிலர் கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் நடத்திய சோதனையில் கள்ளத்துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீசாருக்கு அவர் பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்