கிணற்றில் குளிக்கச்சென்ற மாணவர் பலி
கிணற்றில் குளிக்கச்சென்ற மாணவர் உயிரிழந்தார்.
பெரம்பலூர்:
குளிக்க சென்றார்
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வசித்து வருபவர் சின்னையா. இவரது மகன் சிவபாலா (வயது 14). இவர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை உப்போடை அருகே இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் சிவபாலா தன் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அந்த கிணற்றின் 2 பக்கமும் 5 அடி உயர கல் தூண் நட்டு கம்பி வேலி அமைத்து உள்ளனர். மற்ற 2 பக்கம் திறந்தவெளியாக உள்ளது.
இதில் சிவபாலா ஒரு கல்தூண் மீது ஏறி கிணற்றுக்குள் குதிக்க முயன்றபோது கல் உடைந்ததால் சிவபாலா நிலைதடுமாறி கிணற்றின் சுற்றுப்பாறையில் தவறி விழுந்து, தண்ணீரில் தத்தளித்துள்ளார். இதைக்கண்ட அவரது நண்பர்கள் சிவபாலாவை தூக்க முயன்றனர். அவர்களால் முடியவில்லை. இதனால் சத்தம் போட்டு அருகில் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்தனர்.
சாவு
இதில் ராம்குமார் என்ற இளைஞர் கிணற்றில் குதித்து சிவபாலாவை மீட்டுள்ளார். இதற்கிடையே இது பற்றி சிவபாலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிவபாலாவை அவர்களது நண்பரின் கார் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு சிவபாலாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிவபாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத கிடங்கில் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.