மதுரையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா
மதுரையில் திடீரென அதிகரிக்கும் கொரோனாவால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மதுரை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கிடையே ஒமைக்ரான் தொற்று பரவலும் அதிகமாக இருப்பதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 19 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டது. ஆனால் நேற்று திடீரென ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 4200 பேருக்கு நடத்தப் பட்ட பரிசோதனையில் தான் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மதுரையை பொருத்தமட்டில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அது 118 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 35 பேர் வீட்டு தனிமைப்படுத்துதல் சிகிச்சையில் இருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் அச்சத்தில் இருக்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் சரிவர கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.