பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை அமைச்சர் மனோதங்கராஜ் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-01-04 18:26 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை அமைச்சர் மனோதங்கராஜ் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
குமரி மாவட்ட கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி குமரி மாவட்டத்திற்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. 
நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, அனைவருக்கும் தனது பொங்கல் நல்வாழ்த்துக்களை கூறி பேசியதாவது:-
தொலைநோக்கு பார்வை
தமிழக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிபருப்பு 500 கிராம்,  நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மிளகு 50 கிராம், கடுகு 100 கிராம், கடலை பருப்பு 250 கிராம், மல்லித்தூள் 100 கிராம், புளி 200 கிராம், சீரகம் 100 கிராம், உளுத்தம் பருப்பு 500 கிராம், கோதுமை மாவு 1 கிலோ, ரவை 1 கிலோ, உப்பு 500 கிராம், துணிப்பை ஒன்று, முழுக்கரும்பு ஆகிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க ஆணையிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூ.505 வீதம் ரூ.1088.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார்.
வாழ்த்து
அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள 567 கூட்டுறவு சங்க ரேஷன் கடைகள், 139 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், 20 மகளிர் அமைப்புகள், 3 சுய உதவிக்குழுக்கள், பனைவெல்லம் கூட்டுறவு சங்கம், மீனவர் கூட்டுறவு சங்கம் ஆகிய சங்கங்களால் நடத்தப்படும் 47 ரேஷன் கடைகள், 55 நகரும் ரேஷன்கடைகள் என மொத்தம் 831 ரேஷன் கடைகளில் செயல்பாட்டில் உள்ள 5 லட்சத்து 65 ஆயிரத்து 805 ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.28.57 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
மக்கள் கூட்டம்
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன், இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) சத்யஜோஸ், துணைப்பதிவாளர் (பொதுவினியோகத்திட்டம்) கனகசுந்தரி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (நாகர்கோவில் சரகம்) சங்கரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மாரிமுத்து, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (தக்கலை சரகம்) பாலசுப்பிரமணியன்; அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி ஜெகதா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், கலசமிறக்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ராஜேந்திரன், அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வினியோகம் செய்யப்பட்டன. இதனால் வினியோகம் செய்யப்பட்ட ரேஷன் கடைகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முதல்கட்டமாக வந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை பெரும்பாலான கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிசுத் தொகுப்பு பொருட்கள் வந்து சேராத ரேஷன் கடைகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட்டு, இன்று (புதன்கிழமை) அல்லது நாளை முதல் வினியோகம் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்