வேலூர் புதிய பஸ் நிலையம் முறையாக திட்டமிடாமல் கட்டுப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு. சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்ளப்படும்.

முறையாக திட்டமிடாமல் வேலூர் புதிய பஸ் நிலையம் கட்டுப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Update: 2022-01-04 18:22 GMT
வேலூர்

முறையாக திட்டமிடாமல் வேலூர் புதிய பஸ் நிலையம் கட்டுப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

புதிய பஸ் நிலையம்

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் சுமார் ரூ.50 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு வணிக வளாகம், கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தானியங்கி வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம் (பார்க்கிங்) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திட்டமிடாமல்

புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை பார்த்தால் கொரோனா வந்தது போல் உள்ளது. பல ஊர்களில் பஸ்நிலையம் அழகாக உள்ளது. ஆனால் வேலூரில் தாறுமாறாக பஸ் நிலையத்தை கட்டி வருகின்றனர். இதற்கு இடையூறாக உள்ள கடைகள் அகற்றப்படும். பக்கத்தில் உள்ள தனியார் இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு கட்டுமானப்பணிகள் நடந்துள்ளது. முறையாக திட்டமிடாமல் அமைத்து உள்ளனர்.

புதிய பஸ் நிலையத்தில் 2 நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். மேலும் நுழைவுவாயில் அருகே எந்தவிதமான கடைகளும் கட்டக்கூடாது. கழிவறைகள் நவீனமாக கட்டி முடிக்கப்பட வேண்டும்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இனிவரும் காலங்களில் புதிய பஸ் நிலையத்தை அடிக்கடி ஆய்வு செய்வேன். இதுகுறித்து நான் கூறியதை அவர்கள் செய்யாவிட்டால் தனியாக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி ஆரம்பம் முதல் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்து கண்டறிந்து, சி.பி.சி.ஐ.டி. மூலம் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூரில் கிரீன்சர்க்கிள் இருக்கும் வரை அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியாது. கிரீன்சர்க்கிள் பகுதியில் ஓட்டல், கடைகள் முன்பாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மணல் குவாரி தொடங்குவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும். மேலும் எந்த பகுதியிலும் அனுமதி இல்லாமல் தற்போது கல்குவாரிகள் இயங்கவில்லை. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி பணிகளை தேர்தலுக்குள் முடிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாற்றில் பாலம்

வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வேலூர் கலெக்டர் அலுவலகம் -காங்கேயநல்லூர் இடையே பாலாற்றில் பாலம் அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாலம் அமைந்தால் புதிய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்