நடவடிக்கை எடுக்கப்பட்டது
குளச்சலில் கழிவுநீர் ஓடையின் மேலே இரும்பு குழாய்கள் மூலம் மூடப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் உடைந்து ஆபத்தான நிலையில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் 3-1-2022 அன்று செய்தி வெளியிடப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய்கள் உடைந்த பகுதியில் புதிய குழாய் அமைத்து சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?
மணவாளக்குறிச்சி பாலத்தில் இருந்து கடியப்பட்டணம் செல்லும் பாதையில் வள்ளியாற்றில் தடுப்பு சுவர் மற்றும் படித்துறை இருந்தது. கடந்த மாதம் பெய்த கனமழையால் கரையோர தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. மேலும், படித்துறை சேதமடைந்துள்ளது. இதனால், ஆற்றில் குளிக்க வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, இடிந்த தடுப்புசுவர் மற்றும் படித்துறையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.முகமது சபீர், குளச்சல்.
மின் இணைப்பு வேண்டும்
புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட சொத்தவிளை ஊரில் குழந்தைகள் நல மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 40 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்று பல மாதங்கள் ஆகிறது. ஆனால், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் இங்கு பயிலும் குழந்தைகள் மின்விசிறி மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, குழந்தைகள் நல மையத்திற்கு மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆர். ராதாகிருஷ்ணன், சொத்தவிளை.
நிழற்குடை தேவை
தேரேகால்புதூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களுக்கு பஸ்சில் செல்கிறார்கள். இங்கு இதுவரை நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் மழையிலும், வெயிலிலும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பயணிகள் நலன்கருதி நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பா.தயானந்தன், எஸ்.பி.காலனி.
திறப்பு விழா காண்பது எப்போது?
ஆரல்வாய்மொழி சந்திப்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறை கட்டிட பணிகள் முடிவடைந்து பல நாட்கள் கடந்த நிலையில் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கழிவறையை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
சாலையில் பாயும் கழிவுநீர்
நாகர்கோவில் நெசவாளர் காலனி, ஹாரிஸ் தெரு பகுதியில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையில் பாய்ந்து செல்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெ.ரசல்சன் மனுவேல், நெசவாளர் காலனி.
சுகாதார சீர்கேடு
மேலசங்கரன்குழி ஊராட்சியில் காரவிளை நரிகுளம் உள்ளது. இந்த குளத்தின் கரையோர பகுதிகளில் இறைச்சி கழிவுகளையும், திருமண வீடுகளில் உள்ள கழிவுகளையும் ெகாட்டி விட்டு செல்கிறார்கள். இந்த கழிவுகள் காற்றில் பறந்து குளத்தில் விழுந்து தண்ணீர் மாசு அடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், குளத்தில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தின் கரையில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜகோபால், பிள்ளையார்புரம்.