முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, ஐம்பொன் சிலை கொள்ளை
திருவெண்ணெய்நல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, ஐம்பொன் விநாயகர் சிலையை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியஆனைவாரி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், பூசாரி சுப்பிரமணி கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கோவிலில் இருந்த 30 கிலோ எடைகொண்ட ஐம்பொன் விநாயகர் சிலை, அம்மன் கழுத்தில் கிடந்த 4 கிராம் தாலி சங்கிலி, 2 தங்க பொட்டு, ஒலிபெருக்கி உள்ளிட்டவைகளை காணவில்லை. மேலும் கோவில் அருகில் உள்ள பாஸ்கரனின் மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் ஐம்பொன் சிலையையும், பாஸ்கரனின் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம், விழுப்புரம் தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர் அசாருதீன் ஆகியோர் கொள்ளை நடந்த கோவிலுக்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.
மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த கோவிலை மோப்பமிட்ட அந்த நாய், அங்கிருந்து சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதேகோவிலில் ஏற்கனவே 2 முறை கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.