வராகநதியில் உலா வரும் முதலை
மேல்மலையனூர் அருகே வராகநதியில் உலா வரும் முதலையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே செவலபுரையில் இருந்து சிறுவாடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் வராகநதி தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தை கடந்து தான் கிராம மக்கள் சென்று வருகிறார்கள். கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது முதலைகள் அடித்து வரப்பட்டன.
அவ்வாறு வந்த 5 வயதுடைய முதலையை சில நாட்களுக்கு முன்பு ஒரு கிணற்றில் இருந்து வனத்துறையினர் பிடித்தனர்.
இந்த நிலையில் நேற்று சிறுவாடி காப்புக்காடு அருகில் வராகநதியில் 5 அடி நீளமுள்ள ஒரு முதலை உலா வந்தது. இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த முதலை கடித்துவிடுமோ? என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். இதனை பிடிக்க வேண்டும் என்றும், வராக நதி தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.