உத்தமபாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
உத்தமபாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் பேரூராட்சி 2-வது வார்டு பகுதியான அம்மாபட்டி விலக்கு, கல்லூரி நகரில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர்.
இதுகுறித்து புகார் தெரிவித்தும் பேரூராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் அம்மாபட்டி-உத்தமபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.