சிவகங்கையில் அனுமதியின்றி கூடியதாக-பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை- எம்.எல்.ஏ.க்கள் உள்பட 415 பேர் மீது வழக்கு
சிவகங்கையில் அனுமதியின்றி கூடியதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்பட 415 பேர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையில் அனுமதியின்றி கூடியதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்பட 415 பேர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அனுமதியின்றி கூட்டம்
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பா.ஜனதா சார்பில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிவகங்கை-தொண்டி ரோட்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் வாகனங்களில் அனுமதியின்றி வந்ததாகவும், கூட்டம் கூடியதாகவும் சூரக்குளம் கிராம நிர்வாக அலுவலர் அஜித்குமார், சிவகங்கை நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
415 பேர் மீது வழக்கு
இந்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையிலான போலீசார் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்பட 415 பேர் மீதும், அவர்கள் வந்த 31 வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் சிவகங்கை அரண்மனை வாசலில் அனுமதியின்றி பா.ஜனதாவினர் பொதுக்கூட்டம் நடத்தியதாக காஞ்சிரங்கால் கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் மற்றொரு வழக்கும் பதிவு செய்துள்ளனர்.