ஆன்லைனில் ரம்மி விளையாடி நகை பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை பாலக்கோடு அருகே சோகம்
பாலக்கோடு அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடி நகை பணத்தை இழந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடி நகை, பணத்தை இழந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆன்லைன் மூலம் ரம்மி
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பொம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. டிரைவர். இவரது மகன் கோகுல் (வயது 21). டிப்ளமோ படித்து முடித்து விட்டு ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கின் போது, வீட்டுக்கு வந்த கோகுல் செல்போனில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
இவர் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் வைத்திருந்த நகை, பணத்தை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி அவற்றை இழந்துள்ளார். மேலும் நண்பர்களிடம் பணம் வாங்கியதாகவும் தெரிகிறது. இதனால் கடன் அதிகரித்ததால் கோகுல் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கேட்டபோது, தான் விஷம் குடித்து விட்டதாக கூறி உள்ளார்.
பரிதாப சாவு
இதையடுத்து அவரை மீட்டு வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து நேற்று முன்தினம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோகுல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.