நல்லம்பள்ளி அருகே ரெயில்பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் அதிகாரிகள் பேச்சு வார்த்தை
நல்லம்பள்ளி அருகே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி ரெயில்பாதை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி ரெயில்பாதை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பணி தடுத்து நிறுத்தம்
நல்லம்பள்ளி அடுத்த சிவாடி ரெயில் நிலையம் அருகே பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிற்கு சிவாடி ரெயில் நிலையத்தில் இருந்து புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியை ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. இந்த ரெயில்பாதையையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சென்று வர ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து ரெயில்வே பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சிவாடி ரெயில் நிலையத்தில் இருந்து பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு வரை புதிய ரெயில்பாதை அமைக்கும் பணி மீண்டும் நடைபெற்றது. இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு ரெயில் பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், தாசில்தார் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி தலைவர் பாப்பா முனியப்பன் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிவாடி ரெயில் நிலையம் அருகே ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ரெயில் பாதையையொட்டி தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து ரெயில் பாதை அமைக்கும் பணியும், சுரங்கப்பாதையை தூர்வாரும் பணியும் தொடங்கியது.